ஸ்ரீ சப்தரிஷிஷ்வரர் காப்பு கவசம்
காப்பு
நினைப்போர்க்கு ஊழ்வினைபோய் துன்பம் போய்
நெஞ்சிற் பதிப்போர்க்கு இன்பம் பதித்து கதித்தோங்கும்
ஞானமும் கைகூடும் ஞானாம்பிகை நாதரின் கவசந்தனை
நாளும் உரைப்போர்க்கு நன்மை நல்கும் சப்தரிஷிஷ்வரர் பாதமே துணை.
கவசம்
ஓம் எனும் வடிவே உண்மையின் உருவே
வேதத்தின் பொருளே வித்தகத் தருவே
காலத்தின் அளவே கருணையின் கடலே
மூலத்தின் முதலே மூஷிக வாகனா
அக இருள் நீக்கி அன்பினை அளிக்கும்
ஆண்டவனே என் சிவ பெருமானே
ஆரியர் சூரியர் அனைவரும் வணங்கும்
ஆதி நாதனே சிவ பெருமானே
வேதப் பொருளே விளங்கு பொன்முடியே
சீதக் கனலே செஞ்சுடரோனெ
ஒத நினைப்போர் உள்ளத்தொளியே
ஆனந்த வடிவே அழகிய உருவே
எங்கும் நிறைந்த இறைவா வருக
பைரவபுரத்தின் தலைவா வருக
இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
நன்மையை நல்கும் நாயகா வருக
சப்தரிஷிஷ்வரா வருக வருக
சதுரகிரிஷ்வரா வருக வருக
சுந்தரலிங்கமே வருக வருக
சுகம் மிக அருள விரைவாய் வருக
பிறப்பை அறுத்து பேரின்பம் தந்து
சிறப்பை நல்க சீக்கிரம் வருக
விருப்பு வெறுப்பு யாவும் இன்றி
பொறுப்பை நல்க பொலிவுடன் வருக
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியும்
நாகாபரணமும் கொன்றை மாலையும்
சூடிய எந்தன் சுந்தர வதனா
ஆங்கிரஸர் புலஸ்தியர் வசிஷ்ட மாமுனியும்
அத்ரி மரீசி பரத்வாஜருடன்
பிருகு எனும் சப்தரிஷிகள்
வணங்கிய சப்தரிஷிஷ்வரர் நாமம் வாழ்க
ஞானம் வழங்கும் ஞானாம்பிகையே
பஞ்சசக்திக்கு அருளிய திருவே
பாரில் பலவித நன்மைகள் அருள
பார்வதியே நின் பதமலர் தருக
சப்தரிஷிகள் வணங்கிய நாதா
சகல புவன சற்குண நாதா
சீரருள் நல்கும் சிவபெருமானெ நின்
சீரடி பணிந்தேன் சிறப்புடன் காப்பாய்
முருகா முத்துக்குமரா வேலா
முனிவர்கள் போற்றும் உமையின் பாலா
வள்ளி தெய்வானை மனம்கவர் சீலா
வரம் பல அருள உடனே வாராய்
திருவருள் தந்து திவ்யமாய் வாழ
குருபகவானே குறைகள் களைவாய்.
அனைவர்க்கும் நாளும் அறிவுரை வழங்கும்
திருவே உருவே தினமும் பணிந்தேன்
காசிக்கு நிகராய் அருள்தனை வழங்கும்
காலபைரவா நினதருள் பெறவே
காலையில் மாலையில் கனிவாய் உந்தன்
நாமமே நினைத்தோம் நாங்களும் தொழுதோம்
சகல நன்மைகள் அருளும் இறைவா
என்றும் எங்கும் நிந்தன் நாமம்
மறவா வரத்தினை நல்கவும் வேண்டி
மகிழ்வுடன் நிந்தன் சன்னதியடைந்தோம்.
சிதம்பர நாதனே சிரசினை காக்க
நெல்லையப்பரே நெற்றியை காக்க
திருவீழிநாதரே விழியினை காக்க
நாகேஸ்வரரே நாசியை காக்க
செஞ்சடையோனே செவியினை காக்க
நமசிவாயனே நாவினை காக்க
முக்கண்ணனே என் முகத்தினை காக்க
எக்கணமும் எனை எழிலுடன் காக்க
தேனுபுரிஸ்வரர் தோள்களை காக்க
கைலயம்பதியன் கரங்களை காக்க
மகாலிங்கனே மார்பினை காக்க
வாயுலிங்கனே வயிற்றினை காக்க
கோடீஸ்வரரே கொடியிடை காக்க
காளஹஸ்தீஸ்வரர் கால்களை காக்க
அங்கம் யாவிலும் இன்னல்கள் அகற்றி
சங்கம் வளர்த்த சிவனார் காக்க
பாவங்கள் நீக்கி பயத்தினை போக்கி
பரமேஸ்வரனே செழுமையாய் காக்க
சக்தியை கொடுத்து முக்தியை அளிக்க
முக்தீஸ்வரரே விரைந்தென்னை காக்க
காக்க காக்க கருணா சாகரா
நோக்க நோக்க நொடிப்பொழுதிலும் எனை
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவங்கள் விலக்க
எல்லா இன்னலும் எளிமையாய் அகல
பொல்லா வினைகள் பொடியென விலக
எந்தையாய் எந்தன் சிந்தையில் இருந்து
வாழும் வழியினை வளமுடன் நல்க
வானாய் மண்ணாய் வளியாய் ஒளியாய்
ஊனாய் உயிராய் உண்மையாய் இன்மையாய்
யாவிலும் நிறைந்த சிவபெருமானெ
சீலமாய் வாழ சீரருள் புரிவாய்
சப்தரிஷிஷ்வரா சரணம் புகுந்தேன்
சாந்தமும் அமைதியும் தந்திடுவாயே
சாதிக்க நினைக்கும் பக்தருக்கெல்லாம்
சகல நன்மைகள் அளித்திடுவாயே
சப்தரிஷிஷ்வரா சரணம் சரணம்
ஞானாம்பிகையே சரணம் சரணம்
கணபதியே நின் பாதம் சரணம்
வேலவனே நின் தாளடி சரணம்
தக்ஷ்ணாமூர்த்தியின் தாள்கள் சரணம்
பஞ்சசக்திகள் பாதம் சரணம்
மகாலக்ஷ்மியின் மலரடி சரணம்
காலபைரவரின் கழலடி சரணம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக