Google

Custom Search

Ammachatram from Ahayam

புதன், 6 ஜனவரி, 2010

அம்மாசத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருத்தலம்

அமைவிடம்:

சோழ வள நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் தக்ஷ்ண கங்கை என புகழ் பெற்ற காவேரி நதியின் தென்புறத்தில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் கிராமம். கோவில் நகரமாம் குடந்தை மாநகரின் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் சித்த பிரமை போக்கும் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம் .

பெயர் காரணம்:

இவ்வூரின் மகிமை பவிஷ்யோத்த புராணத்தில் பைரவபுரம் என்றழைக்கப்பட்டு பிறகு சக்குவாம்பாள்புரம் எனவும் பின்னர் அம்மணி அம்மாள்சத்திரம் எனவும் அழைக்கப்பட்டு பின்னர் மறுவி அம்மாசத்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.

காலம்:

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருத்தலம் மராட்டிய மன்னர் சரபோஜி மஹாராஜா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தர்ம நிலங்களில் ஒன்றாகிய சக்குவாம்பாள்புரம் எனும் அம்மாசத்திரத்தில் உள்ளது.

கோவிலின் சிறப்பு:

இக்கோவிலில் சப்தரிஷிகள் மூலவரை பூஜித்து உள்ளதால் சப்தரிஷிஷ்வரர் என்று இறைவன் திருநாமம் பெற்றுள்ளார். இறைவியின் பெயர் ஞானாம்பிகை ஆகும். ஸ்தல விருட்சம் பலா மரம் மற்றும் வில்வ மரம் ஆகும். இத்திருத்தலத்தில் முக்கியமாக பைரவ தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகாலபைரவரை வணங்கினால் பிதுர் தோஷத்திலிருந்து விடுபடுவார்கள். மேலும் விநாயகர், முருகன், தக்ஷ்ணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர், விஷ்ணு, சனீஷ்வரர், சூரியன், சந்திரன், நாகர் ஆகிய அனைத்து தெய்வங்களும் சுற்று பிரகாரங்களில் இனிதே அருள்பாலிக்கும் திருத்தலம்.



கோவிலின் அமைப்பு:

கோவிலின் தெற்கு வாயில் நம்மை சாலையிலிருந்து வரவேற்க பிரதான வாயில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. வினாயகருடனான த்வஜ ஸ்தம்ப பீடம் நம்மை ஆசீர்வதிக்க வரவேற்க பிரதோஷ புகழ் நந்தி கம்பீரமாக நின்று சப்தரிஷிஷ்வரரை அணுக நமக்கு அனுமதி அளிக்கின்றார். சற்று முன்னேறிச் செல்ல ஞானத்தை அள்ளி வழங்கும் ஞானாம்பிகை தாயார் சிவன் சன்னதிக்கு செல்லும் வழியின் வலப்பக்கத்தில் இருந்து தென் திசை நோக்கி சாலை வழியாக உள் நுழையும் பக்தர்களுக்கு உள்ளார்ந்த அன்புடன் அருள் பாலிக்கின்றார். மேலே சென்று சிவபெருமானை வழிபட மனதில் ஏகாந்த ஆனந்தம் ததும்புகின்றது. சிவ லிங்கத்தின் இடப்புறத்தில் சிவ பெருமான் நடராஜராய் நின்று அருள் பொழிகின்றார்.

பிரகார வலம் வரும்போது விக்னங்களை விநாசனம் செய்யும் விக்ன தென் திசையில் விநாயகர், தக்ஷ்ணாமூர்த்தி, மாடங்களில் சனீஸ்வரர், சப்த ரிஷிகள் மற்றும் நால்வர் திகழ, மேல் திசையில் லிங்கோத்பவர் மற்றும் மாட மேடைகளில் விநாயகர், மூன்று லிங்கங்கள், சண்முகப் பெருமான், கெஜலெக்ஷ்மி தாயார், வட திசையில், விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஷ்வரர் மற்றும் கீழ்திசையில் ஒரு லிங்க பெருமான், காலபைரவர், சூரிய, சந்திர, மற்றும் நாகர் சன்னதியுடன் விளங்குகின்றது.


திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.


ஸ்ரீகாலபைரவர்:

காசியை காலபைரவர் ஸ்தலம் என்பார்கள். காசியில் வாழ்பவர்களுக்கு எமவாதனை கிடையாது ஆனால் பைரவர் தண்டனை உண்டு. ஏனென்றால் காசியை எட்டு திக்குகளிலிருந்தும் எட்டு விதமான பைரவர் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். இதனாலேயே காசி பைரவஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.

காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டு திசைகளிலும் எட்டு விதமான பைரவர் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அதனால் தான் அம்மாசத்திரம் பைரவஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இப்படி பலவகைகளில் அம்மாசத்திரமும் காசியும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதிலும் காசியில் உள்ளவர் பாவங்களை போக்கும் சக்தி கங்கைக்கு இல்லை. இந்த சக்தி அம்மாசத்திரத்திற்கு உண்டு என பவிஷ்யோத்த புராணம் கூறுகிறது.

இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும். இங்குள்ள ஸ்வாமி அஷ்டபைரவ ரூபியாக இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.

இங்கு உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் சனி தோஷம், பிதுர் தோஷம், நவகிரஹ தோஷம், திருமணத்தடை ஆகியவை நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.

விசேஷ சிறப்பு பூஜைகள்:
• ஞாயிறு தோறும் ராகு காலங்களில்
• தேய்பிறை அஷ்டமி தினங்களில்
• பிரதோஷ வழிபாடு

தமிழ் எண்களுடன் கூடிய நவகிரஹ சக்கர கல்வெட்டு:

இந்த சிவாலயத்தின் அம்மன் முன்புள்ள மண்டபத்தின் உட்புற விதானத்தில், கூறையில் 12 ராசிகளின் உருவங்கள் சிற்பங்களக பொறிக்கப் பெற்றதோடு நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் எனும் அமைப்பில் கட்டங்களுடன் நவகிரஹ சக்கரம் கல்வெட்டுக்களாக அமைக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களில் தமிழ் எண்கள் இலக்கமாகப் பொறிக்கப்பெற்றுள்ளது. எந்த வரிசை கட்ட்த்தில் எண்களை கூட்டினானும் 45 என்ற எண்ணிக்கை வரும். இதன் (4+5) கூட்டு தொகை 9 ஆகும். இது ஒன்பது ராசிகளின் அதிபதிகளை குறிப்பதாகும். பொதுவாக 45 என்று வருமாறு இது போன்ற எண்கள் உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, மற்றும் கேது ஆகிய கிரஹங்களின் சக்கரங்களை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. பன்னிரண்டு ராசிகளையும் உள்ளடக்கிய தமிழ் எண்கள் கொண்ட ஒரெ நவக்கிரஹச் சக்கரம் கல்வெட்டாகப் பொறிக்கப்பெற்றுள்ளது வேறு எங்கும் காண இயலாத தனிச் சிறப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக